சிருஷ்டிப்பின் மணி மகுடமாய்த் திகழும் மனித குலத்தில், தேவன் பெண்களையும் தமது சாயலாகவும், தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்தார். ஏதேன் தொடங்கி, மீட்பீன் திட்டத்தில் தேவன் பெண்களுக்கு பங்கு வைத்திருக்கிறார்.
வேதாகமத்தில் பெண்கள் :
பழைய ஏற்பாட்டில் பெண்களை தேவன் பல்வேறு விதங்களில் பயன்படுத்தியிருக்கிறார். பணிப்பெண்ணாயிருந்த சிறுமி முதல், இராஜாத்தியாயிருந்த எஸ்தர் வரையிலும், தேவன் எல்லாரையும் வித்தியாசமின்றி பயன்படுத்தியிருக்கிறார். இல்லத்தரசிகளையும், கூடாரவாசிகளையும் பயன்படுத்தியிருக்கிறார். இராஜாக்களை வழிநடத்திச் செல்லவும் தேவன் பெண்களை பயன்படுத்தியிருக்கிறார். விருத்தசேதனம் பண்ணவும், மோசேயின் மனைவியாகிய சிப்போராளைப் பயன்படுத்தினார். தேவன் தமது திட்டத்தை நிறைவேற்றப் பெண்களைப் பயன்படுத்தின விதங்கள் மிகவும் ஆச்சரியமாகவும், விளங்கிக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. புதிய ஏற்பாட்டிலும், பெண்களின் ஊழியத்தைப் பார்க்கிறோம். இயேசு இவ்வுலகில் அவதரிக்கவும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தினார். இயேசுவுடனே கூட பல வகைகளில் ஊழியம் செய்த பெண்களைப் பார்க்கிறோம். பெண்கள் தங்கள் ஆஸ்திகளால் ஊழியம் செய்திருக்கிறார்கள். பேதுருவின் மாமியைப் போல பணிவிடை செய்தவர்கள் இருந்திருக்கக்கூடும். எரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாள், இயேசுவின் பிரயாணங்களில் உதவி செய்ததாக சரித்திரத்தில் வாசிக்கிறோம். இயேசு, சிலுவையிலறையப்பட்ட போது தைரியமாய் அங்கு பெண்களும் நின்றிருக்கிறார்கள். உயிர்தெழுந்த இயேசுவை முதலில் தரிசத்ததும் பெண்களே. இயேசுவின் உயிர்த்தெழுதலை முதலில் அறிவித்ததும் பெண்களே.
அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தில் அநேக பெண்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். பெந்தெகொஸ்தே நாளில் மேல்வீட்டறையில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட தருணத்திலும் அநேக பெண்கள் இருந்திருக்கிறார்கள். பிலிப்பு பட்டணத்துத் திருச்சபையை ஆரம்பிக்க லீதியாள் காரணமாயிருந்திருக்கிறாள். பின்பு, அந்த சபையின் தலைமைத்துவம் எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் ஆகியோரால் பகிர்ந்துகொள்ளப்பட்டது. பிரிஸ்கில்லாள், வல்லமையுள்ள போதகராகவும், பிரசங்கியாகவும் இருந்தாள். பெபேயாள், இரண்டு சபைகளின் கண்காணியாயிருந்தாள். வீட்டு சபையை கவனித்துக் கொண்டிருந்த ஒரு அம்மாளை, யோவான் வாழ்த்துகிறார்.
திருச்சபை சரித்திரத்தில் பெண்கள்
சபை சரித்திரத்திலும் அநேக பெண்களின் பங்களிப்பைப் பற்றி வாசிக்கிறோம். சமாரியா ஸ்தீரி ரோமில் நீரோ மன்னனின் வீட்டாரைக் கூட தேவனன்டை வழிநடத்தியிருக்கிறாள். சூசன்னா வெஸ்லி, பல எதிர்மறையான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஜெபிக்கிற தாயாராக இருந்தபடியால், அவர்களின் இரு பிள்ளைகளான ஜான் வெஸ்லியும், சார்லஸ் வெஸ்லியும், மெத்தடிஸ்ட் திருச்சபையை உருவாக்கினார்கள். தம் உயிரையும் துச்சமாக மதித்து, நம் இந்திய தேசத்திற்கு வந்த ஐடா ஸ்கடர், எமி கார்மிக்கல் அம்மையார், ஹனா மார்ஷ்மேன், அன்னை தெரேஸா, ஈடித் மேரி பிரொன், ஹல்டா பன்டெய்ன் போன்றோர்களை சரித்திரம் மறக்காது. நம் தேசத்திலுள்ள பல பெண்மணிகளும் தங்கள் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்து தேவனுடைய பணியை செய்திருக்கின்றனர். சி.எம்.சியை மருத்துவ கல்லூரியாக உயர்த்திய ஹில்டா லாசரஸ், இந்தியாவின் முதல் திருச்சபையை உருவாக்கிய கிளாரிந்தா ஆகியோரின் பணிகள் மிகச்சிறந்த முன்னுதாரணங்கள்.
எழுப்புதலில் பெண்கள்
எழுப்புதலிலும் பெண்களின் பங்கு அளவிடப்படப் முடியாதவைகளாயிருந்திருக்கின்றன. அசுசா தெரு எழுப்புதலுக்குக் காரணமாயிருந்த வில்லியம் செய்மூரை, அந்திய பாஷைகள் பேசும்படி வழிநடத்தியது லூசி பேரோ என்கிற எழுப்புதல் பிரசங்கியார். செய்மூரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பெண் ஜென்னி ஈவான்ஸ் அவர்கள் செய்மூரின் மனைவியாவார்கள். அவர்கள் மிஷனரி பணியின் தலைமைத்துவத்தை ஏற்றதுமில்லாமல், ஆராதனைகளில் பிரசங்கித்தார்கள். இந்த எழுப்புதலில் பங்குப்பெற்ற ஒரு பெண் பண்டித இராமாபாயின் முக்தி ஆசிரமத்திற்கு வந்து அங்கிருந்த அநேக பெண்களை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்குள் நடத்தி, அந்நிய பாஷை பேசும் அனுபவத்தை பெறச் செய்தார். இந்த அனுபவம் இந்திய தேசத்திற்குள் இங்குதான் முதல்முறை கிடைத்தது.
AG சபையில் பெண்கள்
இந்த எழுப்புதலில் உருவான AG சபையின் சார்பில், மேரி சாப்மேன், C.S. ஈடி, டாரிஸ் எட்வர்ட்ஸ் போன்றார்கள் தமிழ் பிரதேசத்தில் வந்து சபைகளை ஸ்தாபித்தனர். K.P வலசையில் தொழிற் பள்ளிக்கூடம் ஆரம்பித்ததில் டாரிஸ் எட்வர்ட்ஸ் அம்மையாரின் பங்கு அதிகம். கொலீன் குயின் அம்மையார், பெண்களுக்கான திரித்துவ வேதாகமப் பள்ளியை நிறுவினார்கள்.
ஸ்டூவர்ட் சீனியரின் மனைவி, சகோதரி. லோயிஸ் மற்றும் சகோதரி. டெர்ரி போன்ற மிஷனரிகள் இருந்தாலும், சுதேசி பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. The remedy for “MISUSE” is not “NON-USE” but “PROPER USE” என்பார்கள். குறைவு நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் பெண்களை பயன்படுத்தாமல் இருப்பதை விட சரியாகப் பயன்படுத்துவதே சரியான தீர்வாக இருக்கும். சகோதரி டெர்ரியின் முயற்சியினால், நம் தேசத்தில் 2004-ஆம் ஆண்டில் பெண்கள் ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் தேசிய பெண்கள் மாநாடு நடத்தப்பட்டு, நான் அகில இந்திய AG ஸ்தாபன பெண்கள் ஊழியத்தின் தலைவியாக தெரிந்தெடுக்கப்பட்டேன். என்னுடன் சகோதரி வசந்தா ராஜாமணியும், டாக்டர். ராணி ஜெயச்சந்திரனும், சகோதரி நிர்மலாவும் என்னுடன் இணைந்து பொறுப்பு வகிக்கின்றார்கள். பெண்கள் ஊழியத்தில், காரிய குழு உறுப்பினர்களாக 3 பேரும், தமிழ் பிரதேச பெண்கள் ஊழியத்தின் ஒருங்திணைப்பாளர் ஒருவரும், மண்டலத் தலைவர்களாக 20 பேரும், ஒருங்கிணைப்பாளர்களாக 142 பேரும், அவர்களுக்குக் கீழ் ஒவ்வொரு போதகரின் மனைவியும் செயல்படுகின்றார்கள்.
இந்த ஊழியத்தினால், பல தேவ ஊழியர்களின் மனைவிகள் தங்களுக்குள் தேவன் வைத்திருக்கும் திறமைகளையும் தாலந்துகளையும் அறிந்துக்கொண்டு, ஊழியத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தங்கள் கீழ் உள்ள விசுவாசிகளை எப்படி அடையாளங்கண்டு, பயிற்சியளித்து பயன்படுத்துவது மற்றும் எப்படி அவர்களை கண்காணிப்பது என்று போதிக்கிறோம். இதினிமித்தம் ஸ்தாபன சபைகளில் உள்ள அநேக சகோதரிகள் வல்லமையாக ஊழியம் செய்கின்றனர். வரவிருக்கும் எழுப்புதலிலும் பெண்களுக்கென்று, தேவன் ஒரு பெரும் பங்கை வைத்திருக்கிறார். எனவே ஒவ்வொரு சபையிலும் உள்ள பெண்கள் தேவன் தங்களுக்குத் தந்திருக்கும் திறமைகள், தாலந்துகள் மற்றும் வரங்களை அவருடைய இராஜ்ஜியத்திற்கென்று பயன்படுத்த ஆவலுள்ளவர்களாகவும், ஆயத்தமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பெண்களை சபைத் தலைவர்கள் இனங்கண்டு, அவர்களைப் பயிற்றுவித்து, தகுதியான இடத்தில் பயன்படுத்த வேண்டும். மட்டுமல்ல அவர்களுக்குள் தரிசனத்தைப் புகுத்தி, ஜெபிக்கிறவர்களாக மாற்றி கண்காணிப்பு செய்ய வேண்டும். சகோதரிமார்களும், கர்த்தர் நம்மைப் பயன்படுத்தும் போது பெருமைக்கு இடம் கொடுத்துவிடாமல், அப்பிரயோஜனமான ஊழியர் என்று எண்ணி, அதிகாரத்திற்கு நம்மை கீழ்ப்படுத்திக் கொள்வோமானால், கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கும், வரவிருக்கும் எழுப்புதலுக்கும், நாம் மிகவும் பிரயோஜனமுள்ளவர்களாக இருப்போம்.