• 0452 4200664
  • No.30 Navalar Nagar, 1st Street, Madurai- 625 016

Prayer & Finance

தமிழ் பிரதேச சபைகளின் வளர்ச்சியில் ஜெபத்தின் மூலம் எழுப்புதல்

 

நமது நல்ல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்தே மகிமை

 

​​நமது தமிழ் பிரதேசதேவசங்கம் வெற்றிகரமாக தனது 75 ஆண்டுகளை கடந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.  இந்த மகத்தான வெற்றிகாகத் தேவன் பயன்படுத்தின பாத்திரங்களை நினைவுகூர்ந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

 

​176 சபைகள்தான் 1990ஆம் ஆண்டுவரை இருந்தது. அப்பொழுது இருந்தத் தலைவர்கள் சபைகளின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டுமே என்ற ஏக்கத்திலிருந்தபோது உதித்துதான் “அறுவடையின் பத்தாண்டு திட்டம்”.  நமது பிதாக்கள் சங்கை லு. ஜெயராஜ், சங்கை ஞ.ளு ராஜமணி மற்றுமுள்ள நிர்வாகக் குழுவினர் வளர்ச்சித் திட்டங்களைக் குறித்துத் தீவிரமாக ஆலோசித்ததில் பிறந்ததுதான் இலாக்காக்கள்: ஜெபம், சுவிசேஷ பிரபல்யம் சபை நிறுவுதல், பயிற்சி, பொருளாதாரம் இந்த இலாக்காக்களை செயல்படுத்தப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

 

​ஜெபம் : Rev. D. மோகன்

​சுவிசேஷம் சபை நிறுவுதல் : Rev. P.S. ராஜமணி

​பயிற்சி : Rev. சகரியா

​பொருளாதாரம் : Rev. சுவர்ணராஜ்

 

​பாஸ்டர் D. மோகன் அவர்கள் ஜெபத்தை தீவிரப்படுத்தினார்கள், முதல்முறையாக நிர்வாகக் குழுவினரும் மண்டலத் தலைவர்களும் மூன்று நாட்கள் உபவாசமிருந்து வல்லமையாக இடைவிடாமல் ஜெபிக்க ஆரம்பித்தனர். அந்த ஜெபம் அத்தனை தலைவர்களையும் அனல்மூட்டி எழுப்பினது.  இப்படி வருடத்தில் இரு முறை தனிமையான இடத்தைத் தெரிந்தெடுத்து, அங்கு தங்கியிருந்து ஜெபித்தோம்.  நமது தலைவராயிருந்த சங்கை ஜெயராஜ், சங்கை P.S.  ராஜமணி மற்றும் மூத்தப் போதகர்கள் அனைவரும் ஜெபம் முடியும்வரை இணைந்து ஜெபித்தார்கள்.  நேரம் போவதே தெரியாது, ஆவியானவர் அனைவர் மீதும் இறங்கி வல்லமையாய் ஜெபிக்க வைத்தார்.

 

​அதனாலே எல்லா இலாக்காக்களும் எழுப்புதல் அடைந்தது.  ஐந்து வருடத்திற்குள் 500 சபைகளைத் தாண்டிப் போய் கொண்டிருந்தது.  ஜெபம் வலுவடைந்து எல்லா சபைகளிலும் அதிகாலை ஜெபம், உபவாச ஜெபம், 24மணி நேர ஜெபம், தொடர் ஜெபம் இவ்வாறு தமிழ் பிரதேசம் எங்கும் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.

​நல்ல வேலைகளில் இருந்தவர்கள் தங்கள் வேலைகளை இராஜினாமா செய்துவிட்டு விரிவாக்க வேதாகம மையங்களில் இணைந்து முழு நேர ஊழியர்களானார்கள்.  எங்கு பார்த்தாலும் புது சபைகள் தோன்றிக்கொண்டே இருந்தது.  இதற்கெல்லாம் வல்லமையான ஜெபமே காரணமாக இருந்தது. 2000ஆம் ஆண்டை அடையும் பொழுது 900 சபைகளை கடந்துவிட்டோம்.

 

​ஜெபம் அதனுடைய ஆசனத்திலிருந்து ஆட்சி செய்யுமானால் நிச்சயம் எல்லாத் தடைகளையும் அது உடைத்தெறியும்.  அந்த நாட்களில் ஜெபம் ஆளுகை செய்ததுபோல, இப்பொழுது மீண்டும் ஜெபம் தனது இடத்தை நமது ஸ்தாபனத்தில் பிடித்திருக்கின்றது.  ஜெயமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜெபம் தனது ஆசனத்தில் ஏறியிருக்கின்றது.  ஆகையால் எழுப்புதல் ஆரம்பித்திருக்கின்றது.  அன்பானப் போதகர்களே, ஜெபத்தை மட்டும் தூக்கிப்பிடியுங்கள், மற்ற பிரச்சனைகளை விட்டுவிட்டு எல்லாரும் ஜெபத்தில் இணையுங்கள்.  இப்பொழுது ஐம்பது சதவீதம் போதகர்களே ஜெபத்தில் இணைந்திருக்கிறார்கள்.  ஏனைய போதகர்களே! ஜெபம் ஜெயிக்கும், உங்களை ஜெபிக்க வைக்கும், பதரை எல்லாம் ஜெபத்தில் போடுங்கள் சாம்பலாக்கிவிடும்.

 

​நீங்களெல்லாரும் ஜெபிக்கிறவர்கள்தான். ஆனால், ஐக்கியப்பட்டு, இணைந்து, ஒருமனப்பட்டு தமிழ் பிரதேசப் போதகர்கள் ஏக சிந்தையும், ஏக அன்பும், இசைந்த ஆத்துமாக்களாய் ஜெபித்துத் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்புவோம்.

 

●       1 பேதுரு -– 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று, ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

●      எபேசியர் - 4:2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

 

மீண்டும் ஓர் பெரிய எழுப்புதலின் உள்ளங்கையளவு மேகம் தோன்றியிருக்கிறது.  போதகர்களே ஒருமனமாய் இணைந்து ஜெபிப்போம். பெரும் மழையில் நனைவோம்.  எல்லா சபைகளும் ஆயிரம் அங்கத்தினர் எண்ணிக்கையைத் தாண்டும்.  வாரந்தோறும், ஞானஸ்நான ஆராதனைகளும், இடம் விரிவாக்கம், புதிய சபைகளும் ஆயிரமாயிரமாய்த் தோன்றும்.  அதிகமாய் படித்தவர்கள் ஆயிரக்கணக்கில் முழுநேர ஊழியத்திற்கு வருவார்கள்.  வேதாகமக் கல்லூரிகள் எல்லாம் நிரம்பி வழியும்.  75 துதியின் ஆண்டுக்குப் பிறகு பெரிய முன்னேற்றங்களை நமது ஸ்தாபனத்தில் கர்த்தருடைய ஆவியானவர் இயேசுவின் மகிமைக்காகச் செய்வார்.

 

 

 

 

2025 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com