“ஜெபம் பண்ணு, வேதம் வாசி” எல்லாம் சரியாகும் - இது நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொற்தொடராகும். ஜெபமும் வேத வாசிப்பும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்தாலும், அதற்கு முன்பாக ஒருவர் தன்னையும் தன்னுடைய பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளவும் (Self awareness), அதை கையாள்வதற்கான மன ஆரோக்கியம் அல்லது ஆத்தும சுகம் (Emotional Health) மிகவும் முக்கியமாகும்.
ஓவ்வொரு நபரும் தனது சொந்த திறனை உணர்ந்து, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களை சமாளிக்கக்கூடிய, மற்றும் பலனிக்கக்கூடிய நல்வாழ்வு நிலையே மன ஆரோக்கியம் என்றும், இதன் மூலம் மனிதர்கள் இந்த சமுதாயத்திற்கு பிரயோஜனமான பங்களிப்பை அளிக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தமிழகத்தின் மக்கள் தொகையில்
• ஏறக்குறைய 7 லட்சம் பேர் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• 70 லட்சம் பேர் பொதுவான மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
• 60 வயதுக்கு மேற்பட்ட 23 ஆயிரம் பேர் மனச்சோர்வு மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• 2 லட்சம் குழந்தைகள் சாதாரண நுண்ணறிவு மற்றும் கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
• 11 லட்சம் குழந்தைகள் குழந்தை பருவ மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
• 15 லட்சம் பேர் மதுபானம் மற்றும் தவறான பழக்கங்களால் உண்டாகும் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகை 8 கோடிக்கும் அதிகம். இதனடிப்படையில் 8 நபர்களில் ஒருவர் மிதமாகவோ அல்லது அதிகமாகவோ ஏதோ ஒரு காரணத்தினால் மனநலன் பாதிக்கப்பட்டவராக இருக்கின்றனர் இதுதான் நம்முடைய மாநிலத்தின் நிலை.
அப்படியென்றால் நம்முடைய சபைகளில் இருக்கும் விசுவாசிகளைப்பற்றியும் அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு பிரச்சனை அல்லது வியாதி அல்லது தேவைகளின் அடிப்படையில் ஆண்டவராகிய இயேசுவை தேடிவருபவர்களே அதிகம். அதிலும் குறிப்பாக சபைக்கு வந்தவுடன் அவர்களுடைய அடிப்படையான மற்றும் அவசியமான தேவைகளை ஆண்டவர் இயேசு சந்தித்து விடுகிறார். ஆனால் ஒரு விசுவாசி, சீஷன் என்ற நிலையில் வளர வேண்டுமாயின் அந்த நபருக்கு ஆத்தும சுகம், (Emotional Health) அதாவது மன ஆரோக்கியம் அவசியமாகும். ஆத்துமா வாழ்ந்து நன்றாக (Emotional Health)
இருந்தால் தான் அனைத்து காரியங்களிலும் வாழ்ந்திருக்க முடியும் (III யோவான் 2) ஆகையால் தான் “…என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்((Emotional wellbeing) கிடைக்கும்” என்று இயேசுவே நமக்கு அழைப்புக் கொடுத்திருக்கின்றார்.
கிறிஸ்துவோடு ஒரு நபர் தனிப்பட்ட உறவில் ஆழமாக வளர ஆரம்பிக்கும் பொழுது அவருடைய ஆழ்மனதில் இருக்கின்ற தீர்க்கப்படாத மறைந்திருக்கும் பிரச்சனைகள், (Unresolved Issues) மற்றும் பிறரோடு உள்ள உறவுகளில் உள்ள சிக்கல்கள் சரிப்படுத்தப்பட வேண்டிய காரியங்கள் நினைவுக்கு வர ஆரம்பிக்கின்றன. மேலும், ஒவ்வொரு நபரும் ஆவிக்குரிய வாழ்விலும் (Spiritual) அறிவு சார்ந்த விஷயங்களிலும் (Intellectual) மனம் சார்ந்த காரியங்களிலும் (Emotional) பிறரோடு இருக்கும் உறவிலும் (Social) எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்வதற்கும், தொடர்ந்து தேவன் அவர்கள் வாழ்வில் வைத்திருக்கும்
நோக்கத்திற்கு முன்னேறி, வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும், நிறைவு செய்வதற்கும் ஆற்றுப்படுத்தும் ஊழியம் (Counselling Ministry) மிக இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.
உதாரணத்திற்கு, தன் வாழ்வில் திருப்தியற்று, வெறுமை உணர்வோடும், அதே வேளையில் அறநெறி வாழ்வில் தடுமாற்றம் நிறைந்த சமாரியா பெண்னை (யோவான் 4:8-26) இயேசு சந்தித்து, தனிநபர் ஆற்றுப்படுத்தும் ஊழியத்தை செய்ததினிமித்தம், தன்னுடைய உண்மையான தேவை எது என்பதையும், அதை பூர்த்தி செய்து கொள்வதற்கான வழியையும் புரிந்து கொண்டு வாழ்வில் மாற்றம் பெற்றாள்.
மேலும், கிறிஸ்தவர்களை கொலை செய்த சவுலை இயேசு சந்தித்தபின், பர்னபாவின் ஆற்றுப்படுத்தும் ஊழியம் சவுலை தன் நிலையை அறியச்செய்து, ஊழியத்தின் அடுத்த நிலைக்கு எடுத்து சென்றது. இன்றைக்கு சபைகளில் இப்படிப்பட்ட பர்னபாவின் ஊழியங்கள் மிக அவசியப்படுகின்றன. இந்த ஊழியத்தை செய்வதற்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் (Empathy) நிபந்தனையற்ற நல்லபிமானம் (Unconditional Positive regard) மற்றும் உண்மை தன்மை, ஸ்திர தன்மை, ஒருங்கிசைவு (Congruence) போன்ற குணாதிசயங்கள் மிக அவசியமாகும்.
என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை (சங்கீதம் 142:4) என்று தாவீது புலம்புவது போன்று இன்றைக்கு நம்முடைய சபைகளில் தங்களை விசாரிப்பதற்கும், உதவிச் செய்வதற்கும், வழிகாட்டுவதற்கும் உணர்த்துவதற்கும், உண்மையை புரிந்து கொள்ள ஏக்கத்தோடு காத்திருக்கும் விசுாவசிகள் ஏராளம். நம்முடைய பிரசங்க பீடத்தில் நின்று பிரசங்கிக்கும் போது பொதுவான செய்தி எல்லாரையும் சென்றடைந்தாலும், தனி நபரோடு நேரம் செலவுபண்ணி, பொறுமையுடன் அவர்கள் சொல்வதை கவனித்து (Active listening) (II தீதோத்தேயு 2:24 -26) அவர்களின் நிலையை அவர்களே உணரத்தக்கதாக கேள்விகள் கேட்டு (ஆதியாகமம்16:8), அவர்களின் சிந்தனையை தூண்டி, தாங்களே, தங்களுடைய பிரச்சனைகளை உணர்ந்து சரியான தீர்மானம் எடுக்க உதவிச் செய்வதற்கு தனிநபர் மற்றும் குழு ஆலோசனை (Personal & Group Counselling) ஊழியத்தின் மூலம் செய்ய முடியும்.
ஊழியர்களும் தங்களை அதற்கேற்றவாறு பயிற்றுவித்தால் இந்த ஊழியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். (இறையியல் அறிவோடு ஆற்றுப்படுத்துதல் ஊழியத்திற்கு தேவையான பயிற்சியும் (Training on Counselling Psychology and otherSkills) இணையும் போது அது இன்னும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை).
சபை விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, போதகர்களுக்கும் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் மற்றும் குடும்பம் மற்றும் ஊழியத்தில் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள ஆற்றுப்படுத்துதல் ஊழியம் (Counselling Ministry) அவசியமாகும். ஆற்றுப்படுத்துதல் (Counseling) ஊழியத்தின் அவசியத்தைப் புரிந்து, அதற்கான சரியான அடிப்படை பயிற்சிகளை பெற்று செயல்பட ஆரம்பிப்போம். தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவோம்!