நமது ஸ்தாபனம் தமிழகத்தில் துவக்கப்பட்டு 75 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளதைக் கொண்டாடும் இம்மகிழ்ச்சியான தருணத்தில் நமது ஸ்தாபனத்தின் (Assemblies of God) வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது அவசியம். இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சுவையான தகவல்கள், வரலாற்றுப் பதிவுகள், வரலாற்றுப் படிப்பினைகள் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாயிருக்கும். மூத்த தேவ ஊழியர்களுக்கு தாங்கள் கடந்து வந்த பாதையில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூறவும், புத்துணர்ச்சி அடையவும் இது போன்ற தகவல்கள் உதவிடும். வளர்ந்து வரும் இளம் ஊழியர்களுக்கு சிறந்த படிப்பினைகளையும், மன ஊக்கத்தையும் ஏற்படுத்த இதுபோன்ற கட்டுரை பெரிதும் உதவிடும்.
அதே சமயம் இக்கட்டுரை முழுமை பெற்ற வரலாற்று ஆவணமாக கருத இயலாது. இன்னும் ஏராளமான நேரடி பேட்டிகளுடனும் (Primary Data), மற்றும் வரலாற்று நூல்களின் ஆதாரத் திரட்டுடனும் (Secondary Data) விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள குறைந்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்து, அசெம்பிளி ஆப் காட் சரித்திரத்தை, குறிப்பாக நமது தமிழ் பிரதேசத்தின் சரித்திரத்தை சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.
18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட எழுப்புதல்களில் குறிப்பாக சார்ல்ஸ் பின்னி, D.L. மூடி ஆகியோர் போதித்த போதனைகள் 20ம் நூற்றாண்டில் தோன்றிய பெந்தேகோஸ்தே எழுப்புதலுக்கு முன்னோடியாக, அஸ்திபாரமாக அமைந்தது எனலாம். 1857-ல் உருவாகிய கெஸ்விக் கன்வென்ஷன் (Keswick Convention), பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மெதடிஸ்ட் இயக்கத் தந்தை என கருதப்படும் ஜான் வெஸ்லி முன்னெடுத்த பரிசுத்த இயக்கம் (Holiness Movement) பின்னாட்களில் பெந்தேகோஸ்தே அனுபவங்களைக் குறித்த தேடல்களை ஜனங்களுக்குள் ஏற்படுத்தியது.
20வது நூற்றாண்டைப் பொருத்தமட்டில் 1901ல் கென்சாஸ் பட்டணத்தில் டோபிகா என்ற இடத்தில் சார்லஸ் பர்ஹாம் நடத்திய பெத்தேல் வேதாகம கல்லூரியில் தான் முதன்முதலாக பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட சம்பவம் ஆதாரத்துடன் சொல்லப்பட்டுள்ளது. ஏறக்குறைய அப்போஸ்தலர் காலம் போலவே வெளிப்படையான அனுபவங்களுடன் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டார். பர்ஹாம் மூலம் உண்டான அப்போஸ்தல நம்பிக்கை என்னும் இயக்கம், பல தேசங்களில் ஊழியர்களை அனுப்பி பரிசுத்தாவியின் வரங்களைக் குறித்து போதிக்கத் துவங்கியது.
பர்ஹாம் நடத்திய கல்லூரியில் கற்றுவந்த 18வயது நிரம்பிய ஆக்னஸ் உஸ்மான் என்ற பெண்மணி தான் அந்நிய பாஷை அபிஷேகத்துடன் பரிசுத்தாவி பெற்ற முதல் நபர். அதே சம காலங்களில், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட வேறுபல ஊழியர்கள் பல்வேறு தேசங்களில் எழும்பினார்கள். இதற்கு நல்ல உதாரணம், அதே காலத்தில் வேல்ஸ் நாட்டில் ஏற்பட்ட எழுப்புதல் ஆகும். 1904ல் குறிப்பாக ஜவன் ராபர்ட்ஸ் மூலம் பரிசுத்த ஆவியானவர் பிரிட்டன், ஸ்காட்லாந்து பிரதேசங்களில் எழுப்புதல் அனல் மூட்டினார்.
எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது அசூசா தெரு எழுப்புதல். இதில் முக்கியமானவரான வில்லியம் சேய்மூர் (William Seymour) சார்லஸ் பர்ஹாமின் முன்னாள் மாணவரே. அடிமைத் தனத்தால் பாதிக்கப்படட ஆப்ரிக்க - அமெரிக்கர் குடும்பத்தைச் சார்ந்தவர். ஏப்ரல் 7ம் தேதி, 1906ல் வில்லியம் லீ என்பவர் வீட்டில், வில்லியம் சேய்மூர் பிரசங்கத்தினால் ஏற்பட்ட எழுப்புதல், இடவசதி கருதி அசூசா தெருவிற்கு அடுத்த வாரத்திலேயே மாற்றப்பட்டது.
1906 ஏப்ரல் 14ம்தேதி முதல், மூன்று ஆண்டுகள், தினமும் மூன்று ஆராதனைகள் வீதம் வார முழுவதும் நடைபெற்று வந்தன. இந்த எழுப்புதல் 1915வரை நீடித்தது. அந்த எழுப்புதல் தீ பல்வேறு தேசங்களுக்கும் விரைவாகப் பரவியது.
பெந்தேகோஸ்தே அனுபங்களைப் பெற்ற பலதேவ மனிதர்கள் பரிசுத்தாவியின் நிறையைக் குறித்து உலகமெங்கிலும் போதித்து வந்தார்கள். இதன் விளைவாக பல்வேறு பெந்தேகோஸ்தே ஸ்தாபனங்கள் புதிதாக உருவாகின. இவர் தான் ஸ்தாபகர், அவர் மூலமாகவே இந்த பெந்தேகோஸ்தே ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது என்று சில ஸ்தாபனங்கள் சொல்லப்பட்ட போதும், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட எழுப்புதலுக்கும், பெந்தேகோஸ்தே இயக்கம் பிறந்ததற்கும் ஒரு தனி மனிதரை ஸ்தாபகராக கூறமுடியாது. 1934ல் ப்ரெட் கோரம் (Fred Corum) எழுதி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பெந்தேகோஸ்தே இயக்கங்களின் ஸ்தாபகராக ஒரு தனி மனிதரை அன்றைய சபைகள் அங்கீகரிக்கவில்லை, போற்றவில்லை என்று எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. (Assembly of God Heritage 2017-18, Volumes 31-38 P.N.11).
இவ்வரலாற்று உண்மையை அறியாதவர்களும், ஏற்றுக் கொள்ள மனமில்லாதவர்களும் தான், பெந்தேகோஸ்தே அனுபவங்களை சந்தேகத்திற்குரியதாகவே இன்றும் பார்க்கிறார்கள். பெந்தேகோஸ்தே இயக்கம் உதயமாவதற்கு காரணமாயிருந்த பரிசுத்த ஆவியானவரைப் பார்க்கும், சபைகளோ, மீண்டும் ஒருவிசை பரிசுத்த ஆவியின் வல்லமை அனுபவங்களில் தாங்களும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என இன்றும் வாஞ்சையோடு காத்திருக்கின்றன.
அசூசா தெரு எழுப்புதலின் விளைவாகவும், அப்போஸ்டலிக் நம்பிக்கை என்னும் இயக்கம் (Aposotlic Faith Movement) மூலமாகவும் 1909 முதல் 1912வரை பெந்தேகோஸ்தே அனுபவங்களைப் பெற்ற ஏராளமான சபைகள், ஸ்தாபனங்கள் உருவாகின.
பெருகிவரும் பெந்தேகோஸ்தே சபைகளுக்குள் ஐக்கியத்தையும், ஒருங்கிணைப்பையும், ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக உபதேசங்களை வரையறுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் தான் 120 போதகர்கள், சுவிசேஷகர்கள் உட்பட 300பேர், அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் (Arkansas) மாநிலத்தில் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Hot Springs) ஊரில், ஒரு வாரம் கன்வென்ஷன் நடத்தினார்கள். (ஏப்ரல், 1914) அமைப்பு ரீதியாக ஒரே பெயரிலும், ஒரே நம்பிக்கையிலும் செயல்பட அந்த கன்வென்ஷன் கூட்டத்தில் தீர்மானித்ததால், அசெம்பிளிஸ் ஆப் காட் என்ற நமது ஸ்தாபனம் பிறந்தது.
இன்று உலகில் மிகப் பெரிய பெந்தேகோஸ்தே ஸ்தாபனமாக அசெம்பிளிஸ் ஆப் காட் ஸ்தாபனம் வளர்ந்துள்ளது. பல்வேறு ஸ்தாபனங்களுக்குள் 2022ல் எடுத்த கணக்கெடுப்பின்படி உலகமெங்கும் 3,67,398 சபைகளும் 6,85,00,000 விசுவாசிகளும் இருக்கின்றார்கள்.
1914ல் ஹாட் ஸ்பிரிங்கில் அசெம்பிளிஸ் ஆப் காட் ஸ்தாபனம் உருவாகக் காரணமான கன்வென்ஷனில் கலந்து கொண்டவர்களில் மேரி சாப்மேன் என்ற சகோதரியும் ஒருவர். அவரே முதல் மிஷனரியாக இந்தியாவிற்கு 1915ல் அமெரிக்க அசெம்பிளிஸ் ஆப் காட் ஸ்தாபனத்தால் அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்த முதல் AG மிஷனரி இவர்தான். திருமதி. மேரி சாப்மேன் அம்மையார் 58 வயதில் பல மாதங்கள் பிரயாணம் செய்து சென்னை வந்தடைந்தார். சென்னையில் தன்னுடைய ஊழியத்தை துவங்கிய இவர், பெங்களுர், மற்றும் கேரளாவிலும் மிஷனரிப்பணி செய்து 1927ல் மரித்து, கேரளாவில் உள்ள மாவேலிக்கரையிலே அடக்கம் செய்யப்பட்டார்.
1937ம் ஆண்டு டோரிஸ் அம்மையார் முதலாவது கேரளாவில் ஊழியம் செய்தார். பின்பு தாய்நாடு திரும்பிய பின், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சோக சம்பவங்கள் மூலம், இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத நிலை குறித்து மிகுந்த வேதனையடைந்தார். கர்த்தருடைய அனாதி தீர்மானத்தின்படி மீண்டும் வாய்ப்பு பெற்று டோரிஸ் எட்வர்ட்ஸ் தம்பதியராக கேரளா வந்தடைந்தனர். ஆயினும் தமிழ் மக்கள் மேல் உள்ள மிகுந்த அன்பினால் 1948ல் டோரிஸ் எட்வர்ட்ஸ் மிஷனரி தம்பதியினர், செங்கோட்டை அருகில் உள்ள கணக்கப்பிள்ளை வலசையை, மையமாக கொண்டு தங்கள் ஊழியத்தைத் துவங்கினார்கள். ஆரம்ப நாட்களில் அம்மையாருக்கு ஊழியத்தில் உதவியாக இருந்த இந்திய மிஷனரிகள் C.T. டேவிட் மற்றும் M.O. ஜான் ஆகியோர் ஆவர். 1949-ஜுலை 3ம்தேதி ஆராதனையில் மற்றொரு விசேஷம், தங்கத்தலைவர்களில் ஒருவரான சங்கை Y. ஜெயராஜ் அவர்கள், ஊழியத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதும் ஆகும்.
தமிழ் பிரதேச வரலாற்றில் 1948ம் வருடம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வருடம். ஏனென்றால் தேவ சங்க சபை சார்பான ஊழியம் டோரிஸ் எட்வர்ட்ஸ் அம்மையாரால் துவக்கப்பட்டதும் 1948ல் தான். மதுரையைக் குறித்து தரிசனம் பெற்ற ஆலிவர் போத், இந்திய போதகர் M. பெஞ்சமின் ஒத்தாசையுடன் தமிழ்நாடு வேதாகமப் பள்ளி உருவானதும் (இன்றைய தமிழ்நாடு வேதாகமக் கல்லூரி) 1948ல் தான்.
சுயாதீனமாக ஊழியம் செய்துவந்த அநேக ஊழியர்கள் அந்நாட்களில் தமிழ்பிரதேச ஊழியங்களில் இணைய விரும்பினாலும், தமிழ்நாடு வேதாகமப் பள்ளியில் பயின்ற மாணவர்களே பின்னாட்களில் தமிழ்பிரதேச வளர்ச்சிக்கு முக்கிய காரணமானார்கள்.
மேலும் டோரிஸ் எட்வர்ட்ஸ் அவர்களால் 1952ஆம் ஆண்டு தொழிற்கல்வி பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளி, அநேகர் கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கற்று அவரை பின்பற்றுவதற்கு வழிவகுத்தது. தேவன் இவர்களை வல்லமையாய் பயன்படுத்தி, இவர் மூலமாய் 10 தேவ சங்க திருச்சபைகளை ஸ்தாபிக்க உதவிசெய்தார். மேலும் செங்கோட்டையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு சிறுவர் ஊழியங்கள் இவரால் துவங்கப்பட்டது. போதகர் Y. ஜெயராஜ், M. பெஞ்சமின், C.T. டேவிட், M.S. ஜோசப், ராஜமார்த்தாண்டம், P.D. மாணிக்கம், V. மோசஸ், அருளப்பன், S.S. ஸ்டீபன் மற்றும் பல்வேறு தேவ ஊழியர்கள் டோரிஸ் எட்வர்ட்ஸ் அம்மையாருடன் இணைந்து தமிழ் பிரதேச வளர்ச்சிக்கு அயராது பாடுப்பட்டனர். 1991ஆம் ஆண்டு டோரிஸ் எட்வர்ட்ஸ் அம்மையார் காலமானார்.
==
1948 முதல் 1990 வரை
தமிழ் பிரதேச வளர்ச்சியை அறுவடையின் பத்தாண்டு திட்டங்களுக்கு முன், பின் என இரண்டாக பிரித்துப் பார்ப்பது அவசியம். 1948ஆம் ஆண்டு மதராஸ் பிரதேச தேவசங்கம் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஸ்தாபனமே பின்நாட்களில் தமிழ் பிரதேச தேவ சங்கம் என்று பெயர் மாற்றம் அடைந்தது. போதகர். பெஞ்சமின் பிரதேச தலைவராகவும், சங்கை. எட்வர்ட்ஸ் துணை பிரதேச தலைவராகவும் மற்றும் சங்கை. ஆலிவர் போத் செயலாளராகவும் தலைமைப் பொறுப்பேற்றனர். 1949ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதேச தேவசங்க முதல் மாநாடு ஒரு வகுப்பறையில் தான் நடைபெற்றது.
மிஷனரிகளின் பங்கு
டோரிஸ் அம்மையார் அல்லாது தமிழ்நாட்டிற்கு வந்து ஊழியம் செய்த வேறு பல முக்கியமான மிஷனரிகளும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: சங்கை. டேவிட் ஸ்டூவர்ட் (சீனியர்), செல்வி. கொலின் க்வின், செல்வி. பெர்ம் ஒக்ளி, சங்கை. ஜான் ரைட், சங்கை ஸ்டீவ் ஆலன், சங்கை. ஜிம் லோவல் மற்றும் பலர். திருச்சபைகளை ஸ்தாபிப்பது, சகஊழியர்களை உற்சாகப்படுத்துவது, இளைஞர்கள் மற்றும் பெண்களை ஊக்குவிப்பது, பிரதேசத்தின் பணிகளை ஒருங்கிணைப்பது என்று ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் இவர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர்.
ஸ்தல ஊழியர்களின் பங்கு
இவர்களுடன் நம் ஸ்தல ஊழியர்களின் பங்களிப்பும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ் பிரதேச தேவசங்கத்தை உருவாக்கிய ஸ்தல ஊழியர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிடுவது சாத்தியமல்ல் ஆயினும் முக்கியமான சில ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாக வேண்டும். சங்கை. Y. ஜெயராஜ், சங்கை K.C. ஆன்ட்ரூஸ் மற்றும் சங்கை. ஆதாம் துரை. இவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த ஊழியம், அநேக ஊழியர்களை உற்சாகப்படுத்தி எண்ணற்ற திருச்சபைகளை துவங்கும் இந்த முயற்சியில் இவர்களை முன்னோடிகளாய் திகழ வைத்தது. குறிப்பாக தென் மாவட்டங்கள் முழுவதும் ஏராளாமான சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. சென்னைப் பகுதியில் முதல் சபை சேத்துப்பட்டில் பாஸ்டர் V.மோசஸ் அவர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இரண்டவது சபை பாஸ்டர் எலியாசர் மூலம் கோடம்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது (1963). அதன் பிறகு 1973ல் பாஸ்டர்
மோகன் அவர்கள் மூலம் சென்னையில் மூன்றாவது AG சபை உருவானது, அவர்கள் மூலம் ஏராளமான சபைகள் சென்னையைச் சுற்றிலும் உருவானது. அவர்கள் மூலம் உருவான திரள் கூட்ட சபையின் மாதிரியும், தமிழகத்தில் ஏராளமான மெகா சபைகள் உருவாக காரணமாயிற்று. அதைப் போன்ற அநேக மூத்த போதகர்கள் புதிய சபைகளை நிறுவுவதில் அதிக அக்கறை செலுத்தினார்கள். எனவே, தமிழ் பிரதேசத்தின் திருச்சபைகள் அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. ஒரு வீட்டுத் திண்ணையில் ஆரம்பமான தமிழ்ப்பிரதேச ஊழியம் 42 வருடங்களில், பெரும் தியாகத்தினால் தமிழ்நாடு முழுவதும் பரவி வளர்ச்சி அடைந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
வேதாகமக் கல்லூரிகளின் பங்கு
1948ல் துவக்கப்பட்ட தமிழ்நாடு வேதாகமப் பள்ளி (இன்றைய TBC) தேவ சங்க ஸ்தாபனத்தின் மூலம் இந்தியாவில் துவங்கப்பட்ட இரண்டாவது பழமையான வேதாகம பயிற்சி பள்ளி என்னும் பெருமைக்குரியது. தமிழ் பிரதேச தேவசங்கம் வளர்ச்சிக்கு பெருமளவு காரணமானவர்கள் இந்த தமிழ்நாடு வேதாகம கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் திருச்சபை ஊழியத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டப்படியினால்,
பெண்களுக்காக ஒரு வேதாகம கல்லூரியை ஆரம்பிக்க தரிசனம் கொண்ட Rev. Y. ஜெயராஜ் அவர்கள், Spring Field, Missouri பட்டணத்தில் இருந்த ஒய்வு பெற்ற மிஷனரி கொலின் குயின் அவர்களை சந்தித்து, இத்தரிசனத்தை பகிர்ந்து கொண்டார். நான் வந்து உதவி செய்கிறேன் என்று விருப்பத்தோடு சொன்ன கொலின் குயின் அம்மையார் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கு வந்த க.பி.வலசையில் உள்ள மிஷனரி பங்களாவில் 10 மாணவிகளோடு திரித்துவ வேதாகம கல்லூரி ஆரம்பிக்க உதவி செய்தார். இதில் பயிற்சி பெற்ற ஏராளமான பெண்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஊழியர்களின் துணைவியாராகவும் வடஇந்தியாவில் மிஷனரிகளாகவும் ஊழியம் செய்து வருகின்றனர்.
இன்னும் ஏராளமான ஊழியர்கள் தேவை என்ற நிலை வந்தபோது 1998ல் Madras Assemblies of God Bible Coleege (MABC) New Life AG சபையில் ஆரம்பிக்க ஆண்டவர் உதவிச் செய்தார். இங்கு பயிற்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும், வடஇந்தியாவிலும் சிறப்பாக ஊழியம் செய்து வருகின்றனர்.
"Antioch Biblical Seminary and College" 2014-ம் ஆண்டு, AG ஸ்தாபனத்தில் இணைந்தது. இங்கு, அழைப்புப் பெற்ற ஆண்களும், பெண்களும் இறையியல் பட்டப்பயிற்சி பெற்று இந்தியாவின் பல இடங்களில் முழுநேர ஊழியர்களாகவும், நேரமாக கல்லூரியில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். பத்தாண்டு அறுவடை திட்டத்தின் காலத்தில் ஏற்பட்ட விரிவு வேதாகம கல்லூரியும் ஏராளமான ஊழியர்களை உருவாக்கி, தமிழ் பிரதேச வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. அனைத்து கல்லூரிகளும் இன்றைக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
1950க்கு முன்பு, விரல்விட்டு எண்ணக்கூடிய திருச்சபைகளை மட்டுமே கொண்டு துவங்கிய தமிழ் பிரதேச தேவசங்கம், வெகுவாய் வளர்ச்சிபெற்று, தொடர்ந்து 75 ஆண்டுகளில் தென்னிந்திய தேவசங்கத்தின் வலிமையான பிரதேசமாய் திகழும் அளவிற்கு ஓங்கி நிற்பது நம் ஸ்தாபனத்தின் பெருமை.
மண்டல விரிவாக்கங்கள்
1960ல் Rev. Y. ஜெயராஜ் அவர்கள் தலைமைத்துவ பொறுப்புக்கு வந்த பொழுது தமிழ் பிரதேசத்தில் ஐந்து மண்டலங்களே இருந்தன.
அச்சமயத்தில் மொத்தம் ஏறக்குறைய 36 சபைகளே இருந்தன. ஆகையால், ஊழியர்கள் தனிமையை உணரக்கூடாது என்பதற்கும், எளிதாக கூடுவதற்கு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு பட்டணம், அதை சுற்றிலும் குறைந்த ஐந்து சபைகள் என்ற இலக்கோடு செயல்பட்டு, அவைகள் ஒரு மண்டலமாக மாற வேண்டும் என்ற தூர தரிசனத்தோடு செயல்பட்டதால் இன்று 71 மண்டலங்கள், 10 பிராந்தியங்கள் என்ற நிலையில் வளர்ந்துள்ளது.
1991 முதல் இன்றுவரை
அறுவடையின் பத்தாண்டு என்ற திட்டம் (DH) நமது ஸ்தாபனத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அறுவடையின் பத்தாண்டுத் திட்டம் 1990ல் 500 புதிய சபைகள் ஆரம்பிக்கும் இலக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெபம், சுவிசேஷ ஊழியமும் சபை நிறுவுதலும், பயிற்சி, மற்றும் நிதி இலாகா என்ற 4 முக்கிய இலாகாக்கள் அப்போது ஏற்படுத்தப்பட்டன. ஜெப தலைவராக சங்கை மோகன் அவர்களும், சுவிசேஷ ஊழியம் மற்றும் சபை நிறுவும் ஊழிய தலைவராக சங்கை P.S. ராஜாமணி அவர்களும், பயிற்சி இலாகா தலைவராக சங்கை C. சகரியா அவர்களும், நிதி இலாகா தலைவராக சங்கை A. சுவர்ணராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
அதிகாலை ஜெபங்களும், சுவிசேஷ ஊழியமும், கிளை ஊழியங்கள் ஸ்தாபிப்பதும் அதிகளவு வளர்ந்தன. பயிற்சி இலாகா மூலம் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இக்காலங்களில் தான் விரிவு வேதாகம கல்லூரி பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. பத்தாண்டு அறுவடை திட்டத்தின் காலத்தில் மட்டும் 800 புதிய சபைகள் நிறுவப்பட்டன. நிதி இலாகா மூலம் நூற்றுக்கும் அதிகமான சபைகளுக்கு இடங்கள் வாங்கப்பட்டன.
பத்தாண்டு அறுவடைத் திட்டங்களைத் தொடர்ந்து
2001-2005க்கான “CB 2000” என்ற ஐந்தாண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000க்கும் அப்பால் (CB 2000) என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் வீட்டு சபைகள் நிறுவுதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. விசுவாசிகளை ஊழியம் செய்ய பயிற்றுவிப்பதற்கு 6பயிற்சி புத்தங்ககங்களும் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2006-2010 ஆண்டிற்கான “விஷன் இந்தியா” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது “விஷன் 2020” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையிலுள்ளது. கீழ்க்கண்ட இலக்குகளை வைத்து இத்திட்டம் செயல்படுகிறது.
2021 - 2030 எழுப்புதலின் பத்தாண்டு
ஆதித்திருச்சபை கண்ட எழுப்புதலின் அனுபவத்தை இக்காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற தரிசனத்தோடு, தமிழ் பிரதேசம் கீழ்க்கண்ட இலக்குகளை அடைய ஜெபத்தோடு செயல்படுகிறது.
1914ல் அசெம்பிளி ஆப் காட் சபை பிறந்ததற்கு காரணமான பரிசுத்தாவியின் எழுப்புதலை மீண்டும் காண நமது ஸ்தாபனம் வாஞ்சிக்கிறது. மீண்டும் அக்காலங்களில் ஏற்பட்ட தீவிர ஜெப எழுப்புதலும், பரிசுத்த ஆவியின் வரங்களை நாடுவதும் அதிகரித்து வருகிறது. விசுவாசிகள் அனைவரையும் ஊழியத்தில் அனுமதித்த ஒரே காரணத்தால் தான் இன்று உலகத்தில் 6.5கோடி விசுவாசிகள் உள்ள ஒரே பெந்தேகோஸ்தே இயக்கமாக நமது ஸ்தாபனம் வளர்ந்துள்ளது. 2022ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி 3,67,398 சபைகள் உலமெங்கும் உள்ளன. அடுத்த பத்தாண்டுகள் அதே முந்திய கால எழுப்புதலை நோக்கமாக கொண்டு செயல்படும் தமிழ் பிரதேசம் நிச்சயம், மாபெரும் சரித்திரத்தை படைக்கும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.
நமது தமிழ் பிரதேச வளர்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணம், பல்வேறு இலாகாக்கள்
ஏற்படுத்தப்பட்டதால், அநேக சிறந்த தலைவர்கள் உருவானார்கள். பல்வேறு இலாகாக்களின் சிறந்த
ஊழிய நிர்வாகத்தால், ஸ்தாபனம் நல்ல தரத்துடன் வளர்ந்தது.