ஆராதனை (Worship) என்கிற வார்த்தை, திருச்சபைகளிலும், கிறிஸ்துவ வட்டாரங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தை. இது துதி ஆராதனை (Praise and Worship), சபை ஆராதனை (Church Service) போன்ற சில அர்த்தங்களிலும் கிறிஸ்தவர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. Worship என்ற ஆங்கில வார்த்தைக்கு ஆராதனை என்றோ வழிபாடு என்றோ தொழுகை என்றோ பொருள் கொள்ளலாம். நல்ல இசையுடனும், நல்ல பாடல்களுடனும் கர்த்தரை புகழ்ந்துபாடுவதுதான் ஆராதனை என்று கருதுபவர்கள் அநேகர் உண்டு. ஆனால், இது ஆராதனையின் ஒரு பகுதி மட்டுமே. இதைத்தான் போதகர் ரிக் வாரன் தன்னுடைய நூலில் (The Purpose Driven Life) ஆராதனை என்பது பாடலோ அல்லது இசையோ அல்ல அவைகளை எல்லாம் கடந்தது என்பதனை விளக்குகிறார்.
நமது வாழ்க்கை முறையே ஒரு ஆராதனை வாழ்க்கை முறையாக இருக்கவேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார். "Anything we do that brings pleasure to God is Worship". நாம் கர்த்தருக்கென்றே அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். (ரோமர்-11:36/ கொலோ - 1:16, 17) நமது ஆராதனை வாழ்க்கை முறைமைதான் கர்த்தரோடு ஒரு நெருங்கிய உறவிற்குள் நம்மை தொடர்ந்து நிலைக்க வைக்கிறது.
அதேவேளையில், கர்த்தரை மனதார, வாயார துதித்து பாடி ஆராதனை செய்யும் முறைமையை வேதாகம பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் காணமுடியும். எங்கெல்லாம் அவர்கள் அதனைச் செய்தார்களோ, அங்கெல்லாம் கர்த்தரின் கரத்தின் கிரியைகளை பார்க்க இயலும். இது, கர்த்தரின் ஜனங்கள் கூடி, பாடல்களுடனும் வாத்தியங்களுடனும் கர்த்தரை ஆராதிப்பதன் முக்கியத்துவத்தை விளங்கப்பண்ணுகிறது, கர்த்தர் அதனை அங்கிகரிப்பதனாலேயே அவரது கிரியைகளை, வல்லமையை, மகிமையை அந்த சூழ்நிலைகளில் வெளிப்படுத்துவதை காணமுடியும்.
உதாரணமாக, தகுந்த உபவாச ஆயத்தத்துடன் யோசபாத்தும் அவனது ஜனங்களும் கர்த்தரை மனதார துதித்தபோது அவர்கள் யுத்தம் செய்யாமலேயே பெரும் வெற்றியை கர்த்தர் கொடுத்தார் .(2 நாளாகமம் 20:1-26)
பவுலும் சீலாவும் மிகவும் அடிக்கப்பட்ட நிலைமையிலும், சிறைச்சாலைக்குள்ளே ஜெபம்பண்ணி மகிழ்ச்சியோடு கர்த்தரை துதித்து பாடினபோது கர்த்தரின் கிரியைகள் அற்புதமாக வெளிப்பட்டது (அப்.16:24-33), சிறைச்சாலைக்காரனின் குடும்பம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவதற்கு அது ஏதுவாக இருந்தது. கர்த்தர் செய்த அற்புத கிரியைகளுக்காக அவரை புகழ்கிறோம், அதுவே துதி, (Praise) அவர் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி கூறுகிறோம், அதுவே நன்றி செலுத்துதல் (Thanks Giving) (1தெச-5:18). அவர் சர்வ வல்லமையுடைய தேவனாக, மகா உன்னதராக, தாம் ஒருவரே நித்தியமானவராக, மகா பரிசுத்தராக இருக்கிறார். அவரை பரிசுத்த அலங்காரத்துடனே தொழுதுகொள்கிறோம் (சங்.29:2 / 96:9). இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஆராதனை.
மேலும் இன்னும் ஆராதனையை குறிக்கும் சில பதங்கள் வேதத்திலே பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கிரேக்க மொழியில் ′புரோஸ்குனியோ′ (προσκουνέω) என்கிற வார்த்தையின் அர்த்தங்களில் ஒன்று, முகங்குப்புற அல்லது முழங்காலில் விழுந்து, நெற்றி தரையில் படும்படி தலைவணங்கி தலைசிறந்த கனத்தை கொடுப்பதை குறிக்கும். அது ஆராதனை (Worship) என்கிற அர்த்தத்தில் 61 முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. (Strong’s # 4352)
இதுபோன்ற இன்னும் வேறுசில வார்த்தைகள் ஆய்னியோ (αἰνέω) (Praise, to sing praises in honour to God), எப்பி ஆய்னியோ (ἐπίαἰνέω) (To tell a story before and then praise by clapping hands), யூலோகியோ (εὐλογέω) (நன்றாக புகழ்ந்து பேசுவது), டோக்சா (δόξα) (மகிமை செலுத்துவது) போன்ற ஆராதனையை குறிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேதம் தெளிவாக தேவ ஜனங்களின் கூட்டு ஆராதனைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தேவஜனங்கள் கர்த்தருடைய சமுகத்தில் அவரை ஆராதிக்க கூடுகின்றபோது எந்தெந்த விதங்களில் எல்லாம் அதை தங்கள் உணர்வுகளோடு சேர்த்து அவர்கள் வெளிப்படுத்தலாம் என்பதற்கும் சில உதாரணங்கள் வேதத்தில் நாம் காண்கிறோம்.
சந்தோஷத்துடன் (உபாகமம் 12:11,12), மகிழ்ச்சியுடன் (சங்கீதம் 100:2), கைளை உயர்த்தி (சங்கீதம் 134:2), புதிய பாடல்களை பாடி (சங்கீதம் 33;3/96:1), பணிந்து குனிந்து முழங்கால்படியிட்டு (சங்கீதம் 95:6), கரங்களைத் தட்டி (சங்கீதம் 47:1/150:5), இசைக்கருவிகளுடன் (சங்கீதம் 33:2,3 / 150:4), ஆர்ப்பரிப்புடன் (யோசுவா 6:2-5), முகமலர்ச்சியுடன் (சங்கீதம் 126;2)
ஆராதனை வாழ்க்கைக்கு சங்கீதக்காரன் தாவீதையும் ஒரு நல்ல முன் உதாரணமாக கூறலாம். He brought in a new dimension of worship among God’s People. பாடகர் குழுக்களோடும், இசைக்கருவிகளோடும் கர்த்தரை துதித்துபாடி ஆராதிக்கும் முறைமையை இஸ்ரவேல் ஜனங்கள், அதாவது, கர்த்தருடைய ஜனங்கள் நடுவில் அறிமுகப்படுத்தியவன். ( 1நாளகமம் - 15:16-24 / 16:4-8)
இரட்சிக்கப்பட்டு, வேறுபிரிக்கப்பட்ட ஜனங்களாக கூடி வந்து திருச்சபையிலே இதைத்தான் நாம் செய்கிறோம். பலவிதங்களில் இதனை நாம் செய்கிறோம்: நம்முடைய தியாகம், கொடுத்தல், கீழ்ப்படிதல், அர்ப்பணிப்பு யாவும் கர்த்தரால் ஆராதனையாக அங்கிகரிக்கப்படுகிறது. நமது சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதும் புத்தியுள்ள ஆராதனை (a meaningful worship) என்று வேதம் குறிப்பிடுகின்றது. (ரோமர் - 12:1). பழைய ஏற்பாட்டில் பலி செலுத்துதல் ஆராதனையாக கருதப்படுகிறதுபோல (ஓசியா - 14:2) புதிய ஏற்பாட்டில் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி கூறப்பட்டுள்ளது. (எபிரெயர் 13:15)
ஏற்கனவே கூறியபடி கர்த்தருடைய ஜனங்களின் இப்படிப்பட்ட ஆராதனையை, ஆராதனை முறைமைகளை கர்த்தர் அங்கீகரிக்கிறார்: தம்முடைய வல்லமையின் கிரியைகளை அவர் வெளிப்படுத்துகிறார்: கர்த்தரின் நாமம் அதில் மகிமைப்படுத்தப்படுகின்றது. தேவ ஜனங்கள் கர்த்தருடைய சமூகத்தில் மகிழ்ந்திருக்கவும், அவரது பிரசன்னத்தை அனுபவிக்கவும், துதியோடும் புகழ்ச்சியோடும் கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டு அவரை கனம் பண்ணவும் வாய்ப்பளிக்கின்றது. கர்த்தர் தமது ஜனங்களை அதனூடாக ஆசீர்வதிக்கிறார். ( 1நாளாகமம் 16:27-29 / சங்கீதம் - 100)