ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில், தேவ சங்க திருச்சபைகளின் தமிழ் பிரதேச ஊழியர்களுக்கும் விசுவாசிகளுக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்! கடந்த 75 ஆண்டுகளாக நமது தமிழ் பிரதேசத்தை ஆசீர்வதித்து நல்ல வளர்ச்சியைக் கொடுத்த தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக !
எழுப்புதல் என்ற வார்த்தையை மற்றவர்களைவிட தமிழ் கிறிஸ்தவர்கள், அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எழுப்புதல் என்றால் என்ன? வேதாகமம் நமக்கு கொடுக்கும் அதன் அர்த்தம் என்ன என்று அநேகருக்கு தெளிவான விழிப்புணர்வு இல்லை. எடுத்ததற்கெல்லாம் “ இதுதான் எழுப்புதல்!” என்று சொல்லப்படுவதை விசுவாசிகள் கேட்டிருக்கிறார்கள். எனவே எதுதான் எழுப்புதல் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
வேதாகமத்தின் அடிப்படையில் “பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் ஊற்றப்படுவதே எழுப்புதல் (Outpouring of the Holy Spirit).” இதற்குப் “பிதாவின் வாக்குத்தத்தம்,” “பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம்” மற்றும் “உன்னதத்தின் பெலன்.” என்று சொல்லப்பட்டிருப்பதை அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் காண்கிறோம். எழுப்புதலை பெற்றுக்கொண்டதும், சீஷராக்குகிற ஊழியத்தை, ஆதித்திருச்சபை விசுவாசிகளும் ஊழியர்களும் தைரியமாகச் செய்தார்கள். தங்கள் விசுவாசத்திற்காக மரிப்பதற்கும் ஆயத்தமாக இருந்தார்கள்.
இயேசு ஆண்டவர் மூன்றரை ஆண்டுகள், தனது சீஷர்களை உருவாக்கினாலும். அவர் மரிக்கும் நேரத்தில், ஒருவர் அவரை முப்பது வெள்ளிக் காசுக்காக காட்டிக்கொடுத்துவிட்டார். இன்னொருவர் மறுதலித்துவிட்டார். மற்றவர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டார்கள். அவர்களுக்கு ஆண்டவர் நல்ல ஊழிய பயிற்சி கொடுத்திருந்தார். ஆனால், ஊழியம் செய்வதற்கு அவசியமான பெலனும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட உங்களுக்காக “ பிதா ஒரு வாக்குத்தத்தம்” பண்ணியிருக்கிறார். நீங்கள் “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், எருசலேமை விட்டு போகாமல் காத்திருங்கள்,” என்றார்.
எழுப்புதலில் ஜெபத்தின் முக்கியத்துவம் :
ஆண்டவர் இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, சீஷர்கள் மலையிலிருந்து இறங்கி நேராக மேலறைக்குச் சென்றார்கள். அவர்கள் ஏறக்குறைய நூற்றிருபது பேர் ஒருமனப்பட்டவர்களாக ஜெபத்திலும், வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் (With one accord devoted themselves to prayer) அப் 1:14. பத்து நாட்கள் அவர்கள் அங்கே என்ன செய்தார்கள்? எப்படி ஒருமனப்பட்டார்கள்? பேதுரு அந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு தலைவரைப் போல செயல்பட்டார். அவர்கள் ஒருமனப்பட்டு ஜெபத்திலே தரித்திருந்தார்கள். 40 நாட்களுக்கு முன்புதான், ஆண்டவர் இயேசு பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார். அந்த காட்சி அவர்கள் மனதை விட்டு அகலவே இல்லை. அது அவர்களை பரிசுத்த ஆவியானவரின் நிறைவிற்கு அல்லது எழுப்புதலுக்கு நேராக வழிநடத்திற்று.
வேல்ஸ் எழுப்புதலின் இவான்ஸ் ராபர்ட், தனது வாழ்க்கையில் இரவில் எழுந்து, பலமணி நேரங்கள் ஜெபத்திலே தரித்து இருந்திருக்கிறார். அது அவருடைய வாழ்க்கையின் பழக்கமாகவே மாறிவிட்டது. அதன் பிறகுதான் அவர் ஒரு மாபெரும் எழுப்புதலை, தன் வாழ்க்கையிலும், தனது திருச்சபையிலும், தனது தேசத்திலும் கண்டார். அது மற்ற தேசங்களுக்கும் பரவிற்று.
அசூசா எழுப்புதலின் வில்லியம் சீமோர் வாழ்க்கையிலும், தினமும் மூன்று மணி நேரங்கள், பிறகு ஐந்து மணி நேரங்கள், அடுத்து ஏழு மணி நேரங்கள் என ஜெபத்தில் இடைவிடாமல் தரித்து இருந்தார். அவரோடு சேர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த துணி துவைக்கும் சாதாரண பெண்மணிகளும், தங்கள் வேலைகளின் மத்தியிலும் ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எழுப்புதலைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்திய எழுப்புதலானது, பிரிட்டிஷ் இந்தியாவில், பஞ்சாப் மாகாணத்தில் சியால்கோட் என்ற இடத்தில் முதன் முதலில் ஆரம்பமானது. இப்போது அந்த இடம் பாக்கிஸ்தானில் உள்ளது. தேவன் ஜான் ஹைட் என்ற அமெரிக்க பிரஸ்பிடேரியன் மிஷனரியைப் பயன்படுத்தினார். அவர் ஜெப அப்போஸ்தலன் என்றும், அவரது ஊழிய சகாக்கள் “ஒரு போதும் தூங்காத மனிதன்” என்றும் அவரை அழைத்தார்கள். இவர் ஜெபித்த இடத்தை விட்டு அசையாமல் 36 மணி நேரங்கள் முழங்காலில் நின்று ஜெபித்திருக்கிறார்.
மேகாலாயாவில் உள்ள காசியா மலைகளில் ஏற்பட்ட எழுப்புதலானாலும், பூனாவில் முக்தி மிஷனில் ஏற்பட்ட எழுப்புதலானாலும், பாவ மனஸ்தாப ஜெபத்தினால் மட்டுமே எழுப்புதல் ஆரம்பமானது. வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவின் பல இடங்களில் 1904 - 1907 வரை தேவன் கொடுத்த எல்லா எழுப்புதல்களிலும், இந்த பாவ மனஸ்தாப ஜெபமே முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இந்த ஜெபம்தான் இந்திய எழுப்புதலின் சாராம்சமாகும்.
எழுப்புதலுக்காக ஜெபித்தவர்கள், எழுப்புதலை முன்னுரிமையாக வைத்து ஜெபித்திருக்கிறார்கள் (Priority Prayer). எழுப்புதலை பெற்றுக்கொள்ள விடாப்பிடியாக ஜெபித்திருக்கிறார்கள் (Persistent Prayer). எழுப்புதலை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளும் ஜெபம் செய்திருக்கிறார்கள் (Prevailing Prayer).
எழுப்புதலின் விளைவுகள் :
எழுப்புதலின் விளைவுகள் உலகத்தின் பல பகுதிகளிலும் வெவ்வேறு வகையில் இருந்திருக்கின்றன. ஆனால், அதின் சாராம்சம் ஒன்றாகவே இருந்திருக்கிறது.
ஆதித் திருச்சபை எழுப்புதலின் நல்ல தாக்கங்கள் :
எருசலேமில் ஆதித் திருச்சபையில் தேவன் எழுப்புதலை கொடுத்த போது,
சகல தேசத்திலிமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள், தங்கள் தங்கள் பாஷையிலே மேலறையில் பேசப்பட்ட தேவனுடைய மகத்துவங்களைப் புரிந்து கொண்டு, கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். அப்.2; 6-8, 11 .“விளங்காதவர்கள்” இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள் என்று பரியாசம் பண்ணினார்கள். அப். 2;13
இன்றைக்கும் கடைசிகால எழுப்புதலிலும், ஆச்சரியப்படுகிறவர்களும், பரியாசம் பண்ணுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அப்போது, பேதுரு மற்ற அப்போஸ்தலரோடு எழுந்து நின்று .“இது என்ன” என்று குழம்பிப் போயிருந்த கூட்டத்தை நோக்கிப் பேசினார். அந்த நேரத்தில், யோவேல் தீர்க்கதரிசனத்திலிருந்து மேற்கோள் காட்டினார். “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்: அப்பொழுது உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்: உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்ச்சிக்கப்படுவான்...” யோவேல் 2;28 -32.
ஆனால், அப்போது ஆவியானவரால் நிறைந்து, முதல் எழுப்புதல் பிரசங்கத்தில், பேதுரு கடைசிகால இறுதி எழுப்புதலுக்காக, இடைச் செருகளாக “கடைசி நாட்களில்” என்ற வார்த்தையை உபயோக்கிறார். எழுப்புதலின் முதல் பிரசங்கத்தில் மூவாயிரம் பேரும், அடுத்த பிரசங்கத்தில் ஐயாயிரம் பேரும் என்று சீஷர்கள் தொகையானது, எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பெருகிக்கொண்டே போனது.
எழுப்புதலின் ஆரம்பத்திலேயே, அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோன்யத்திலும், அப்பம் பிட்குதலிலும் ஜெபம் பண்ணுவதிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப். 2;42. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய், தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு, மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். இரட்ச்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டுவந்தார். அப்.2; 46,47.
உபதேசத்திலும். அந்நியோன்யத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். ஒருமனப்பட்டவர்களாய், தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு, மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்கள் எல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள்தான் யூத கிறிஸ்தவர்கள் தேவலாயத்திலும், சாலமோனுடைய மண்டபத்திலும், ஜெப ஆலயத்திலும் அனுமதிக்கப்பட்டார்கள். ஸ்தேவானுடைய இரத்த சாட்சி மரணத்திற்குப் பிறகு, அங்கிருந்து துரத்திவிடப்பட்டார்கள். எனினும், பெற்றுக் கொண்ட எழுப்புதலை வீடுகள் தோறும் கூடின கூட்டத்தில் அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள்.
எழுப்புதலிலே, சுவிசேஷம் அறிவித்து சீஷராக்கும் ஊழியத்தை தொடர்ந்து செய்ய, அப்போஸ்தலர்கள் பந்தி விசாரிப்புக்காரர்களாக இருந்தவர்களுக்கும், விசுவாசிகளுக்கும், ஏற்கெனவே, நல்ல பயிற்சி கொடுத்து இருந்தார்கள். எனவேதான், எருசலேம் பட்டணத்திலிருந்து விசுவாசிகள் சிதறிப்போனபோது, “அவர்கள் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்.” அப். 8;4.
எழுப்புதலுக்கு ஆயத்தம் :
எந்த சிறிதும் பெரிதுமான விஷயங்களுக்கும் ஆயத்தம் என்பது அவசியமே. தேவன் கடைசிகால இறுதி எழுப்புதலுக்காக மாபெரும் ஆயத்தங்களை செய்து வைத்திருக்கிறார். அதை நாம் அறிந்து கொள்ளும்போது, நாம் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது. நினிவே மக்களுடைய அக்கிரமம் தேவ சமூகத்தில் வந்து எட்டினது. ஆனால், நினிவே மக்களுக்கு எழுப்புதல் பிரசங்கியாகிய யோனா, மீனின் வயிற்றிலே கடலின் ஆழத்திலே, நாற்றம் தாங்காமல், மூச்சுவிடமுடியாத சூழ்நிலையில், முதலாவது மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினார். அதற்குப் பிறகுதான் அவர் எழுப்புதல் பிரசங்கியாக மாறினார். ஆனால், அவரது பிரசங்கம் எச்சரிப்பின் பிரசங்கமாகவே இருந்தது.
“இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்போது நினிவே கவிழ்க்கப்பட்டு போகும்.” யோனா 3;4. என்று பிரசங்கித்தார். அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டைளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும், மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுடைய சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
அவர்கள் தேவனை விசுவாசித்து, தங்கள் அக்கிரமங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பினார்கள். அவர்கள், ஆபத்திற்கு தப்பித்தது மட்டுமல்லாமல், ஒரு துன்மார்க்க புறஜாதி நகரமே எழுப்புதலைக் கண்டது. எழுப்புதலின் இரகசியமே அல்லது எழுப்புதலின் ஆயத்தமே, பாவ மனஸ்தாப உணர்வடைந்து, இரக்கத்திற்காக எதிர்பார்ப்போடு தேவனிடம் கெஞ்சுவதுதான்! (Repentance Precedes Revival). பாவ மனஸ்தாப உணர்வடையாமல் எழுப்புதல் இல்லை (Without Repentance, No Revival). பாவ மனஸ்தாப உணர்வடைந்து, ஒவ்வொரு பாவங்களையும் தேவனிடம் அறிக்கை செய்வதுதான், தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்தத்திற்கு நேராக நம்மை நடத்தும்.
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்: அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்: அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். ஒருவேளை அவர் திரும்ப மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்: முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்: மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக. கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்: உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.யோவேல்2:12-18
இந்திய எழுப்புதலில் தமிழ்நாட்டின் பங்கு :
எழுப்புதலுக்காக நாம் ஆயத்தமாக வேண்டும். அதிலே எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அதற்கு முன்பு, நம்முடைய ஆண்டவர் அதற்காக செய்திருக்கிற ஆயத்தங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்போது, நாமும் ஆயத்தமாவதற்கு அது நம்மை உந்தித்தள்ளும் ! 1517 ஆம் ஆண்டில் மார்டின் லூத்தர் காலத்திலிருந்து, தேவன் திருச்சபைக்கு இழந்துபோன சத்தியங்களை திரும்ப கொடுக்க ஆரம்பித்தார். ஏறக்குறைய 500 ஆண்டுகளாக படிப்படியாக, திருச்சபை இழந்துபோன சத்தியங்களை திரும்பவும் திருச்சபைக்கு தேவன் கொடுத்தார். இரட்சிப்பு, ஞானஸ்நானம், திருச்சபை சிறுகுழுக்களாக வேதத்தை கற்றுக்கொள்ளுதல், பரிசுத்தம், பரிசுத்த ஆவியானவரின் நிறைவு என்ற, திருச்சபை இழந்த சத்தியங்களையும் அனுபவங்கயையும், தேவன் திரும்ப கொண்டுவந்தார். அதற்காக, சீர்த்திருத்த திருச்சபை (Protestant Movement), ஞானஸ்நான திருச்சபை (Baptist Movement), மெதடிஸ்ட் திருச்சபை (Methodist Movement), பரிசுத்த திருச்சபை (Holiness Movement), பெந்தெகொஸ்தே திருச்சபை (Pentecostal Movement), ஆகியவைகளை தேவன் பயன்படுத்தினார். இந்தியாவிற்கு அப்போஸ்தலர் தோமாவை தேவன் அனுப்பினார். அவர் சென்னையில் இரத்த சாட்சியாக மரித்தார்.
1985 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்த சில மேய்ப்பர்களை (Pastors), இந்தியாவின் அன்றைய “மெட்ராஸ் பட்டணத்திற்கு நீங்கள் போய் ஜெபம்பண்ணுங்கள்” என்று தேவன் சொன்னார். அதன்படியே அவர்கள் வந்து ஒரு ஹோட்டலில் தங்கி உபவாசம் இருந்து ஜெபம்பண்ணினார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் தேவன் தங்களுக்குச் சொன்னதை மெட்ராஸில் இருந்த ஒரு திருச்சபையில் பகிர்ந்து கொண்டார்கள். அதன் சாராம்சம் என்னவெனில்,
“கடைசிகால இறுதி எழுப்புதலை தேவன் இந்தியாவில் ஆரம்பிக்கப்போகிறார். இந்தப் பட்டணத்தின்மேலே தேவன் எழுப்புதல் அக்கினியைப் போடுவதை நாங்கள் பார்த்தோம். அது மேலே எழும்பி, இந்தப் பட்டணத்தின் பல பகுதிகளில் விழுந்தது. விழுந்த அக்கினி ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களில் பரவி, மறுபடியும் மேலே ஒரே அக்கினியாக எழும்பி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழுந்தது. அவைகள் அந்தந்த மாவட்டங்களிலும் பரவி, பிறகு ஒரே அக்கினியாக தமிழ்நாட்டின் மேலே எழுந்தது. அந்த அக்கினி, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் விழுந்தது, அங்காங்கே அது பரவினது. பிறகு அவைகள் ஒரே அக்கினியாக இந்தியாவின்மேலே எழும்பி, உலகத்தின் எல்லா தேசங்களிலும் போய் விழுந்து பரவி, அந்தந்த தேசங்களில் எழுப்புதல் அக்கினியாக மாறி எல்லா தேசங்களிலும் எழுப்புதலை கொண்டுவந்தது,” என்று அன்று பிரசங்கித்தார்கள்.
எழுப்புதலைப் பற்றி இவ்வளவு தெளிவாக நம் தமிழ் திருச்சபைகள் அறியாதிருந்த காலத்திலேயே, தேவன் தமது எழுப்புதலின் திட்ட செயலாக்கத்தை, விசேஷமாக அமெரிக்க ஊழியர்கள் மூலமாக வெளிப்படுத்திவிட்டார்.
கடைசிகால இறுதி எழுப்புதல் :
கடைசிகால இறுதி எழுப்புதலைப் பற்றி “நூறு ஆண்டு தீர்க்கதரிசனம்.” ஒன்றையும் ஆண்டவர் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவும் அமெரிக்காவில் அசூசா எழுப்புதல் முடியும் தருவாயில் மூன்றுபேர் இந்த தீர்க்கதரிசனங்களை சொன்னார்கள். வில்லியம் சீமோர் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலும், சார்லஸ் பர்ஹம் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும், மரியா வுட்வொர்த் எட்டர் என்ற மிகவும் வயதான பெண்மணி அமெரிக்காவின் நடுப்பகுதியிலும், ஏறக்குறைய ஒரே நேரத்தில் ஒரே தீர்க்கதரிசனத்தை சொன்னார்கள். ஆனால், ஒருவர் சொன்னது மற்றவருக்குத் தெரியாது.
“அசூசா எழுப்புதலின் செக்கினா மேகத்தை இப்போது திரும்ப பரலோகத்திற்கு தேவன் எடுத்துக்கொள்ளப்போகிறார். ஆனால், இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து, அதே செக்கினா மேகத்தை எல்லா தேசங்களிலும் அனுப்பப்போகிறார். அது எல்லா தேசங்களிலும் எழுப்புதலைக் கொண்டுவரும். இந்த எழுப்புதல் மற்ற எழுப்புதல்களைப் போல அணைந்துபோகாது. மாறாக, அது வளர்ந்து வளர்ந்து பெருகி, ஆண்டவரது இரண்டாம் வருகையிலே பூரணப்படும்.”
சாத்தான் பணத்தையும், பொருளாதாரத்தையும், பாலுணனர்வுப் பாவங்களையும், தேசத்தலைவர்களையும் பயன்படுத்தி அக்கிரமத்தை உலக முழுவதிலும் பெருகச் செய்துகொண்டிருக்கும்போது, தேவன் தமது எழுப்புதலின் திட்டத்தினால், பிசாசையும் அவனது திட்டங்களையும் முறியடித்து, மாபெரும் கடைசிகால இறுதி எழுப்புதலில், குடும்பங்களைக் கட்டி எழுப்பி, குடும்பங்களின் குடும்பமாகிய திருச்சபையை, வெற்றிகரமாக, தனது இரண்டாம் வருகையிலே எடுத்துக்கொள்ளப் போகிறார். தேவன்தாமே அதற்காக நம்மை விசேஷமாக ஆயத்தமாக்குவாராக !
75 ஆண்டுகளாக தமிழ் பிரதேச தேவ சங்க சபையை, பல நிலைகளில் ஆசீர்வதித்து, மாபெரும் வளர்ச்சியை காணச் செய்த தேவன் ஒருவருக்கே மறுபடியும் மகிமையையும் கனத்தையும் செலுத்துகிறேன்! கடைசிகால இறுதி எழுப்புதலுக்காக தேவன் நம்முடைய திருச்சபைகளை ஆயத்தமாக்குகிறார். அதற்காக, நம்முடைய ஊழியர்களும் விசுவாசிகளும், தேவன் எதிர்பார்க்கும் எந்த கிரயத்தையும் செலுத்தி, அந்த எழுப்புதலை முழுமையாகப் பெற்று, மற்ற இந்திய மாநிலங்களுக்கும், உலகத்தின் எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்க, தமிழ் பிரதேச தேவ சங்க சபைகளுக்கு, தேவன்தாமே அனுக்கிரகம் செய்வாராக !