இயேசுவின் இனிய நாமத்தில் பணி மற்றும் சபை ஸ்தாபித்தல் (Evangelism & Church Planting) இலாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் சுவிசேஷ பணி செய்வதும் சபைகளை ஸ்தாபிப்பதும் சவாலாக உள்ளது. சுவிசேஷமானது எல்லா காலகட்டத்திலும் பல சவால்களின் நடுவே அறிவிக்கப்பட்டு சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதை சபை சரித்திரத்தில் அறிய முடிகிறது. ஆகவே இன்றைய பாதகமான சூழ்நிலையில் சவால்களை ஜெபத்துடன் மேற்க்கொண்டு விசுவாசிகளை உற்சாகப்படுத்தி புதிய திருச்சபைகளை ஸ்தாபிக்க நாம் ஒவ்வொருவரும் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
புதிய திருச்சபைகளை ஸ்தாபிக்க ஒவ்வொரு ஊழியர்களும், திருச்சபையும் கீழ்காணும் மூன்று முக்கிய காரியங்களை செய்ய வேண்டும்.
1. ஒவ்வொரு விசுவாசிகளையும் சுவிசேஷ பணி செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்:
சுவிசேஷ பணி செய்யாமல் திருச்சபைகளை ஸ்தாபிக்க இயலாது. சுவிசேஷ பணியின் கனி, சபை ஸ்தாபித்தல் ஆகும் (The fruit of Preaching the gospel is planting the church). சுவிசேஷத்தை அறிவிப்பது ஒவ்வொரு விசுவாசியின் கடமை ஆகும். இது இயேசுவின் பிரதான கட்டளையாகும். சுவிசேஷம் அறிவிப்பது என்றால் - அறிந்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களை சபைக்கு அழைத்து வருவதாகும். இயேசுவின் சீடன் அந்திரேயா தான் அறிந்த இயேசுவை உடனே தன் சகோதரன் பேதுருவுக்கு அறிமுகம் செய்து இயேசுவண்டை அழைத்து வந்தான் என யோவான் 1;40-42 வசனங்களில் வாசிக்கிறோம். பிலிப்புவும் தான் அறிந்த இயேசுவை உடனே நாத்தான்வேலுக்கு அறிமுகம் செய்து இயேசுவிடம் வந்து பார் என அழைத்து வந்ததை வாசிக்கிறோம் (யோவான் 1:45,46). இந்தப் பணியை ஒவ்வொரு விசுவாசிகளும் செய்ய உற்சாகப்படுத்த வேண்டும்.
ஒரு தேவ மனிதன் இப்படியாக கூறினார் “சுவிசேஷத்தை எப்போதும் அறிவியுங்கள். அவசியமானால் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். வார்த்தைகளை பயன்படுத்தாமல் எப்படி சுவிசேஷத்தை அறிவிக்க முடியும் ?” இதன் பொருள் என்னவெனில் நம்முடைய வாழ்க்கையின் மூலம் இயேசுவை பிறருக்கு அறிவிக்க வேண்டும். கிறிஸ்துவை நாம் சொல்லிலும் செயலிலும் பிரதிபலிக்கும் போது நாம் சொல்லாமலே பலர் இயேசுவை பின்பற்றி வருவார்கள்.
2. ஒவ்வொரு ஸ்தல சபையும், எண்ணிக்கையில் பெருக வேண்டும் என்ற பாரம் தேவை :
நமது தமிழ் பிரதேசமானது கடந்த 75 ஆண்டுகளில் 1325 அங்கீகரிக்கப்பட்ட சபைகளையும், 516 கிளை சபைகளையும் ஸ்தாபித்திருக்கிறது என்றால் இது ஸ்தல சபைகளின் பெருக்கத்தின் மூலம் உண்டான வளர்ச்சி என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. ஸ்தலசபை வளர்வதற்கான இலக்குகளை நியமித்து, செயல் திட்டங்களை ஜெபித்து செயல்படுத்தும் போது ஸ்தல சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கை நிச்சயமாக பெருகும். ஸ்தலசபை எண்ணிக்கையில் பெருகும் போது அதின் மூலம் கிளை சபைகளை உருவாக்கி புதிய திருச்சபைகளை ஸ்தாபிக்க வேண்டும்.
3. ஒவ்வொரு ஊழியர்களுக்குள்ளும் திருச்சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தரிசனம் தேவை :
“தரிசனம் இல்லாத இடங்களில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்” என்று வேதாகமம் கூறுகிறது (நீதிமொழிகள் 29;18). புதிய திருச்சபைகளை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தரிசனம் ஒவ்வொரு ஊழியர்களுக்குள்ளும் இருக்க வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும்.
யூத ஜனங்கள் சிறையிருப்பின் காலத்தில் சிதறுண்ட போது, 10 அங்கத்தினர்கள் இருந்தால், அவர்கள் கூடி ஆராதிப்பதற்கு ஜெப ஆலயங்களை (Synagogue) ஏற்படுத்தி வழிபாடு செய்ததை சபை சரித்திரத்தில் காண முடிகிறது. இதை போன்று நமது சபை அங்கத்தினர்கள் 10 பேர் அல்லது 10 குடும்பத்தினர் ஒரு வட்டாரத்தில் இருந்தால் அவர்களை ஒன்றிணைத்து, அங்கு ஒரு புதிய திருச்சபையை ஸ்தாபிக்க முயற்சி எடுப்போமாக.
எங்கள் “நம்பிக்கை ஏ.ஜி. சபையின்” மூலமாக இந்த தரிசனத்தின் அடிப்படையில் கடந்த 33 ஆண்டுகளில் 128 திருச்சபைகளை ஸ்தாபித்துள்ளோம். எங்கள் திருச்சபையும் வளர்ந்துள்ளது. நாங்கள் ஸ்தாபித்த 128 திருச்சபைகளும் வளர்ந்து. அவர்களும் புதிய சபைகளை ஸ்தாபித்துள்ளார்கள்.
அன்பான தேவ ஊழியர்களே! தேவபிள்ளைகளே ! சுவிசேஷத்தை அறிவிப்போம், ஸ்தலசபை எண்ணிக்கையில் பெருக பாரத்துடன் ஊழியம் செய்வோம். புதிய திருச்சபைகளை தரிசனத்துடன் ஸ்தாபிப்போம். தொடர்ந்து வளரவும் பெருகவும் வாழ்த்துகிறோம்.