• 0452 4200664
  • No.30 Navalar Nagar, 1st Street, Madurai- 625 016

ஆரோக்கியமான குடும்பம்
(Healthy Family)

கிறிஸ்துவுக்குள் அன்பான ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு,
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் குடும்பம், சமுதாயம், திருச்சபை என்ற 3 பகுதிகளில் செயல்படவேண்டிய அவசியம் உண்டு.  அநேக ஊழியர்களும், விசுவாசிகளும் இதை சமநிலையாக கையாளுவதில்லை.  பெரும்பான்மையான நேரங்களில் குடும்பம் என்ற பகுதியில் தான் சமரசம் (Compromise) செய்கிறோம், அதன் விளைவுகளை சந்திக்கிறோம்.  ஒரு குடும்பம் ஆரோக்கியமாக, ஆசீர்வாதமாக இருக்க எளிய 10 வழிகளை கீழே தருகிறேன்.

 

(1) ஆண்டவரை மையப்படுத்தி வாழுங்கள்: (God-Centered Family)


என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (யாத்.20:3)
எல்லா பிரச்சனைகளுக்கும் பிசாசு காரணமாக இல்லாவிட்டாலும், பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அவன் ஒரு முக்கிய காரணம்.  ஆவிக்குரிய யுத்தத்தை ஆவிக்குரிய வழியில் தான் செய்ய வேண்டும்.  ஆகவே குடும்ப ஜெபங்கள், குடும்ப தியானங்கள், குடும்ப ஆராதனைகள், குடும்ப ஊழியங்கள் போன்றவற்றில் ஆண்டவரை மையப்படுத்தி குடும்பமாக செயல்படுங்கள்.


(2) தெளிவாக தொடர்பு கொள்ளுங்கள் (Communicate clearly)


    நீங்கள் கேட்பதற்கு தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாயும்...(யாக்.1:18)
பொறுமையாக கேட்பதும், தெளிவாக, புரிந்துக்கொள்ளும்படி காரியங்களை செய்வதும் ஒரு ஆரோக்கியமான குடுமப வாழ்விற்கு மிகவும் அவசியம்.  தரமான குடும்ப நேரங்களை செலவழியுங்கள்.  உங்களுடைய தொடர்புகள் தடையில்லா தொடர்புகளாக இருக்கட்டும்.


(3) தோழமை என்ற கருத்தை நடைமுறைப்படுத்துங்கள்  (Practice Companionship)


    "…ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்..." (ஆதி.2:18)
சரீரத்திலும், மனதிலும், உணர்விலும், ஆவிக்குரிய பகுதிகளிலும் சரியாக பொருந்துகிற 'ஒருவரைத்தான்' ஆண்டவர் நமக்கு வாழ்க்கை துணையாக தருகிறார்.  ஆகவே, கணவன்-மனைவியாக  அல்ல தோழனாக, தோழியாக பழக வேண்டும்.  தோழமை என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும்போது நெருக்கம் அதிகரிப்பதை உணரமுடியும்.  நம்பிக்கை வளரும், பாதுகாப்பு பெருகும், தியாகங்கள் கணப்படுத்தப்படும்.


(4) மூன்றாவது நபர் குறுக்கீட்டை தவிருங்கள்  (Avoid the interference of 3rd persons)


    இதனிமித்தம் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு…..(ஆதி.2:24)
திருமணத்திற்கு பின்பு பெற்றோர்களை கைவிடவேண்டும் என வேதம் போதிக்கவில்லை.  மாறாக மற்ற எல்லா உறவுகளை விடவும் திருமண உறவை மிக மேன்மையாக, உயர்வாக கருதவேண்டும்.  எக்காரணத்தை கொண்டும், 3வது நபரை அவர்கள் யாராக இருந்தாலும் திருமண உறவிற்குள் அனுமதிக்ககூடாது.


(5) அடிப்படை தேவைகளை உணர்ந்து கொள்ளங்கள்  (Know the basic Needs)


    அன்னாளே ஏன் அழுகிறாய்…..(1சாமு.1;8)
எல்க்கானா தன் மனைவியின் உணர்வுகள், மனஅழுத்தம், மற்றவர்களால் வரும் நிந்தனைகள், போராட்டங்கள் ஆகியவற்றை உணர்ந்ததால் அந்த குடும்பம் சாமுவேலை கொடுத்து தேசத்திற்கு, ஆசிர்வாதமாக மாறியது.  வாழ்க்கைதுணையின்/ பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை உணருங்கள்.

 

(6) பொருளாதாரத்தை ஞானமாக கையாளுங்கள்  (Handle Finance carefully)


    என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி.. நிறைவாக்குவார் (பிலி.4:19)
பொருளாதார தேவைகளுக்காக கர்த்தரை சார்ந்திருப்பதும் நம்புவதும், இருப்பதிற்குள் திருப்திபடவும், ஞானமாக செலவழிக்கவும், கடன் வாங்காதிருக்கவும் தீர்மானித்தால் குடும்பங்கள் நிச்சயம் ஆசிர்வாதமாக காணப்படும்.


(7) பிள்ளைகளை கர்த்தருக்குள் வளருங்கள்  (Grow the children in the Lord)


    பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் (சங்.127:4)
பிள்ளைகள் ஆண்டவர் கொடுத்த பரிசு, அவர்களை அவருக்குள் பக்தியாக வளர்க்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு மிகவும் அவசியம்.  பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்படுவார்களாக. பிரபலமானவர்களாய் இருப்பதைவிட பரிசுத்தமுள்ளவர்களாய், பக்தியுள்ளவர்களாய் இருக்க அதற்கேற்றபடி வளர்க்க ஆண்டவர் உதவி செய்வாராக.


(8) பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்யுங்கள்  (Resolve Conflict quickly)


    சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.(எபே 4:26)
எல்லா உறவுகளிலும் பிரச்சனைகள் உண்டு. ஆளத்துவ வேறுபாடுகளினால் (Personality conflict), கருத்து வேறுபாடுகளினால் (Ideological conflict) நிச்சயம் பிரச்சனைகள் வரும்.  ஈகோவை விட்டுவிட்டு பிரச்சனைகள் பெரிதாவதற்கு சத்துருவுக்கு இடம் கொடுக்காமல் உடனுக்குடன் பேசி சரி செய்து கொள்ளுங்கள்.


(9) நெருக்கத்தை அதிகரியுங்கள்  (Increase closeness)


    உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு (நீதி.5:18)
உங்களுடைய வாழ்க்கை துணையோடே சரீர பிரகாரமாக உணர்வுரீதியாக, மனரீதியாக, ஆவிக்குரிய பிரகாரமாக நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.  உங்களுடைய நெருக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.  குறைவான இடங்களை உடனே சரிசெய்யுங்கள்.


(10) பாலியல் உறவுகளில் திருப்தியாயிருங்கள்  (Satisfy in your sexual life)
    அவருடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக..(நீதி.5:19)
மனைவியோடு சரியான உறவில் இல்லாதவர்கள் தான் பாலியல் பிரச்சனைகளில் சிக்கி அபிஷேகத்தை, குடும்பத்தை, ஊழியங்களை, கிருபைகளை, வரங்களை இழந்துவிடுகிறார்கள்.  திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவுகளை தேடாதிருங்கள்.  அது கர்த்தர் அருவருக்கிற பாவம்.  திருமண உறவிற்குள் பாலியல் உறவு சந்தோஷமானது, ஆசிர்வாதமானது.
    இந்த 10 காரியங்களை குறித்து எழுதுவதற்கு அநேக காரியங்கள் உண்டு.  ஆனால் ஒரு சில வரிகளில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறேன்.  தொடர்ந்து இவைகளை குறித்து சிந்தியுங்கள்.
    ஆண்டவர் தாமே நம்முடைய குடும்பங்களை ஆசிர்வாதமான, சந்தோஷமான குடும்பங்களாய் மாற்றுவாராக.

    

 

 

2025 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps.com